21 Dec 2011

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் போட்டியில் வெற்றி யாருக்கு?


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கான தெரிவு கடந்த 19 ம் திகதி திங்கட்கிழமை அதன் தலைமையகமான சிறீகொத்தாவில் இடம்பெற்றது. கட்சியின் அதிகமான ஆதரவாளர்கள், அக்கட்சியை ஆதரிக்காதவர்கள் கூட கரு ஜயசூரிய தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டுமென அபிப்பிராயம் கொண்டிருந்த ஒரு  சூழலில் எல்லோரது எதிர்பார்ப்புக்கும், கருத்துக்கணிப்புக்கும் மாற்றமாக ரணில்  விக்ரமசிங்க மீண்டும் தலைமைப் பொறுப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரணிலின் தலைமையின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டு இலங்கையின் அரசியல் வரலாற்றில் தோல்வியில் சாதனை படைத்திருந்தும், கட்சியின் தலைமைத்துவத்துவத்திற்கான தேர்தலில் அவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ போன்ற மாற்று அணியினரின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் கட்சியில் ஜனநாயக ரீதியாகத் தலைவராகத் தெரிவு செய்யப்படும் அளவுக்கு கட்சியில் ரணிலுக்கு செல்வாக்குள்ளதா என்ற கேள்வி பலருக்கும் எழுவதில் நியாயமுள்ளது. 



ரணிலுடனான தலைமைத்துவப் போட்டியில் கரு ஜயசூரிய படுதோல்வியடைந்திருக்கிறார் என்பது அவர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையைக் கணிக்கும் போது புலனாகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் 96 செயற்குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 72 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை கரு ஜயசூரிய 24 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார். கரு ஜயசூரிய தலைமைக்குத் தெரிவாகாமைக்கு பிரதான மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம்.

1994ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை ரணில் ஏற்றதிலிருந்து தனது தலைமைத்துவத்திற்கு எதிராகச் செயற்படுபவர்களை ஓரம்கட்டுவதில் அவர் மிகத்தீவிர கரிசனை காட்டியதோடு அவ்வாறானவர்களை கட்சிக்குள் செல்வாக்கற்றவர்களாகவும் மாற்றினார். இந்த வகையில் கட்சிக்குள் தனக்கு சார்பான வலுவானதொரு அணியினரை உருவாக்குவதில் அவர் வெற்றிகண்டார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் தனக்கு மிகவும் விசுவாசமானவர்களை நியமித்தார்.

தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து 2007ம் ஆண்டு கரு ஜயசூரிய அரசதரப்புக்கு கட்சிதாவினார். 2007ம் ஆண்டிலிருந்து பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சராகப் பணிபுரிந்த அவர் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமச் செய்துவிட்டு மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதித் தலைவராக இணைந்து கொண்டார். இவரது கட்சி தாவல் ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களிடையே அவர் பற்றிய நல்லெண்ணத்தை இல்லாமலாக்கியதோடு, இன்றளவும் அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 


ரணிலின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை ஜீரணிக்க முடியாவிட்டாலும், உட்கட்சி முரண்பாடு வலுவடைந்துள்ளதொரு சூழ்நிலையில் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணிலை அகற்றுவது, கட்சியின் முரண்பாட்டை கூர்மையாக்கி கட்சியை பல அணிகளாகப் பிளவடையச் செய்யக்கூடும் எனக்கருதிய கட்சியில் உண்மையான பற்றுடையவர்கள் ரணிலைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

கட்சியின் மூத்த உறுப்பினராக உள்ள கரு ஜயசூரிய, தலைமைத்துவத்துக்கு ரணிலுக்கு அடுத்ததாக பொருத்தமானவராக இருந்தும் தலைமைப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்படாமைக்கு இம்மூன்று பிரதான காரணிகளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.

தலைமைத்துவத்துவத்தைக் கைப்பற்றுவதற்கான காய்நகர்த்தலில் சஜித் பிரேமதாஸாவே உண்மையில் வெற்றி பெற்றிருக்கிறார். இணைப் பிரதித் தலைவர் பதவியிலிருந்து பிரதித் தலைவர் பதவிக்கு உயர்ந்திருக்கிறார்.  கரு ஜயசூரியவுடன் ஒப்பிடும் போது கட்சிக்குள் தனக்கென போதிய செல்வாக்கை சஜித் உருவாக்கியிருக்கிறார். கட்சியினுள் தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபிப்பதற்கானதொரு களமாக தலைமைத்துவப் போட்டியை சஜித் பயன்படுத்தியுள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் தொடர்ந்தும் நீடிப்பதானது மகிந்தவின் அரசாங்கத்திற்கு  உள்நாட்டில் பாரியதொரு அரசியல்  சவால் தோற்றம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை மேலும் தாமதமாக்கியுள்ளது. கட்சியின் தலைமைத்துவத்தோடு முரண்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் மிகக்கிட்டிய அண்மையில் அரச தரப்பில் இணைவதை எதிர்பார்க்கலாம்.  இதனாலேயே, ரணில் மீண்டும் தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்பட்டதையிட்டு ஜனாதிபதி மஹிந்த தனது மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக இலங்கையை ஆட்சி செய்த பழமையான வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று பலம்மிக்க ஒரு எதிர்க்கட்சியாகவேனும் நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் போயுள்ளது. ஜனநாயக தேர்தல் அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில் பலமான ஒரு எதிர்க்கட்சி இருப்பது அவசியம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அந்தத் தகைமையை இழந்து வலுவான உட்கட்சி மோதல்களால் இன்னும் சிதைவடைந்து கொண்டிருப்பது கவலைக்குரிய விடயம்.

தலைமைத்துவத்துக்கான இத்தேர்தலின் மூலம் ரணிலை தலைமைத்துவத்திலிருந்து அகற்றி விட்டு கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி கட்சியை மறுசீரமைத்து வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லலாமென எதிர்பார்த்த மாற்று அணியினரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல பலமானதொரு எதிரணி அவசியமென எதிர்பார்த்த அனைவரது எதிர்பார்ப்புகளும் ரணில் மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் சிதைக்கப்பட்டுள்ளது.

ஹாலிக் அல் - அர்ஷத்

Related Posts Plugin for WordPress, Blogger...