7 Dec 2011

ஈரான் மீது போர் தொடுக்க முயற்சிக்கும் இஸ்ரேல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு 30 மைல் மேற்கேயுள்ள பித்கானா எனும் இடத்திலுள்ள  புரட்சிப் பாதுகாப்பு படையணி இராணுவத் தளத்தில் கடந்த மாதம் நவம்பர் 12ம் திகதி ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தினால் அங்கிருந்த பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாகியதுடன் 17 பேர் கொல்லப்பட்டனர். இவ்வெடிப்புச் சம்பவத்தில் ஈரானின் ஏவுகணை ஆய்வுத் திட்ட மையத்தின் முன்னாள் ஸ்தாபகர் ஜெனரெல் ஹஸ்ஸான் தெஹ்ரானி மெக்ஹதாமும் கொல்லப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் பிரதான ஏவுகணை ஆய்வு மையத்தில் ஏற்பட்ட இப்பாரிய வெடிப்புச் சம்பவமானது ஈரானின் ஏவுகணை ஆராய்ச்சி நடவடிக்கையில் பாரிய பின்னடைவைத் தோற்றுவித்துள்ளது. கடந்த வாரம் ஈரானின் இஸ்பஹான் எனும் இடத்தில் அமைந்துள்ள யுரேனிய நிலைமாற்று மையத்தில் ஏற்பட்ட காரணம் அறியப்படாத மற்றொரு வெடிப்புச் சம்பவத்தினால் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

 ஜெனரெல் ஹஸ்ஸான் தெஹ்ரானி மெக்ஹதாமும் பித்கானா இராணுவத் தளத்தின் தோற்றமும்


இவ் இராணுவ நிலைகளின் மீது ஏற்பட்ட இவ்வெடிப்புச் சம்பவமானது ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலினுடைய  மறைமுகமான போர் நடவடிக்கையின் ஒரு பகுதியென உளவுத்துறை வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஈரானுடைய அணு ஆற்றல், ஏவுகணைத் திட்டங்களை அழிக்கும் நோக்கில் ஈரான் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே இது அமைந்துள்ளது.


ஈரானுடைய அணு ஆற்றலை அழிப்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் நீண்ட நாட்களாகவே மறைமுகமான தாக்குதல்களைத் தொடுத்து வந்துள்ளது. ஈரானின் அணுத்திட்ட ஆய்வு மையத்திலுள்ள கணணிகளை செயலிழக்கச் செய்யும் நோக்கில் 2010ம் ஆண்டு STUXNET என்ற ஒரு வகை வைரசை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அனுப்பியது. அணுச் செறிவூட்டல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தை இவ்வைரஸ் தாக்கி அதனை செயலிழக்கச் செய்ததாக குறிப்பிடப்படுகிறது. எனினும், அமெரிக்காவும் இஸ்ரேலும் அவ்வகையான தாக்குதலொன்றை (CYBER ATTACK) மேற்கொண்டதை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இது 21ம் நூற்றாண்டின் நவீன போர்த் தந்திரமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் வேவு பார்த்துக் கொண்டிருந்த போது அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போயுள்ளதாக நேட்டோ அறிவித்துள்ள அதேவேளை ஈரான் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஈரானியப் படையினரால்  அமெரிக்காவின் RQ-170 ரக ஆளில்லா உளவு விமானம் தாக்கப்பட்டு சிறு சேதங்களுடன் கைப்பற்றப்பட்டதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.


RQ-170 எனும் இவ்விமானம் உளவுத்தகவல்களைத் திரட்டுவதற்கென்று விஷேடமாகத் தயாரிக்கப்படதாகும். இவ்விமானம் ராடர் கருவிகளுக்குத் தென்படாமல் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்டிருப்பதுடன் பல மணித்தியாலங்கள் எவ்வித சிரமமும் இன்றி இலகுவாக உளவுத்தகவல்களைத் திரட்டும் ஆற்றல் வாய்ந்தது. இது முதன்முதலாக 2007ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பயன்பாட்டுக்கு வந்தது. அதனையடுத்து அவ்விமானம் கந்தஹார் மிருகம்  'The Beast of Kandahar'  என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டது.


'The Beast of Kandahar'

எதிரி நாடுகளின் விமானத்தாக்குதலை எதிர்கொள்வதற்காக ஈரானின் விமானப்படை "துரிதமான பதில் தாக்குதல் படையணி" என்ற பெயரில் படைப்பிரிவொன்றை உருவாக்கி அப்படைப்பிரிவு அதிகமான பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலேயே இவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. RQ-170 என்ற இவ்விமானத்தை ஈரானிய விமானப்படை உண்மையாக சுட்டு வீழ்த்தியிருக்கும் பட்சத்தில் அது ஈரானின் இராணுவ வல்லமையை பிரதிபலிப்பதோடு அமெரிக்காவுக்கு பாரிய இழப்பாகவும் கருதப்படும். ஏனெனில், தனது இராணுவத் தொழில்நுட்பத்தை எதிரி நாடு அறிந்து கொள்வதற்கான சூழ்நிலையை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளதேயாகும். இவ்வகை அதி நவீன விமானங்கள் நாட்டுக்குள் ஊடுருவும் போது அதை எவ்வாறு இராணுவரீதியாக எதிர்கொள்ளலாமென்ற முன்னாயத்தங்களில் ஈரான் ஈடுபடலாமெனவும், இவ்விமானத்தை அடிப்படையாக வைத்து ஈரான் தனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய வகை விமானமொன்றைத் தயாரிக்கலாமெனவும் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது.


வியன்னாவை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) கடந்த மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஈரானிய விஞ்ஞானிகள் அணுகுண்டை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணையைத் தாயரிப்பதில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளார்களெனத் தெரிவித்தது. சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் இவ்வறிக்கையை நடுநிலையானதொரு அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டிருக்கும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தினால் உண்மையான எந்தத் தகவலையும் சுயாதீனமாக வெளியிட முடியாது. ஈரான் மீது போர் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகத்துக்கு காரணமொன்றை முன்வைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையைக் காரணம் காட்டி ஈரானை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் இப்போது மேற்கு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே  ஈரான் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய தடைகளை விதித்தது.


ஈரான் அதனுடைய அணுச்செறிவூட்டல் நடவடிக்கைகளில் இருந்து இதுவரை கொஞ்சமும் பின்வாங்கவில்லை. அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டதை அந்நாடு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அணுச்செறிவூட்டல் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் மின்சாரத் தேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் என்று கூறிவருகிறது. மேற்கத்தேய நாடுகளின் அழுத்தங்களினாலேயே ஈரான் இவ்வாறு கூற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானுடைய ஏவுகணைகள் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளெனவும், அவை ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையலாமெனவும் இராணுவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஈரானுடைய ஸஹாப் 3 ஏவுகணை

ஈரான் அதனது அணுச்செறிவூட்டல் திட்டத்தைக் கைவிடாவிட்டால் சரியான நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்கப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெடன்யாகு கடந்த வாரம் ஈரானை எச்சரித்திருந்தார். இக்கருத்தை அவதானிக்கும் இராணுவ ஆய்வாளர்கள் ஈரான் மீது ஒரு தலைப்பட்சமான இராணுவத்தாக்குதலொன்றை இஸ்ரேல் மேற்கொள்ளலாமென எதிர்வுகூறுகின்றனர். இஸ்ரேலின் இந்த முரட்டுத்தனமான கூற்று புறக்கணிக்க முடியாத ஒருவகை எச்சரிக்கையுடனே அனைவராலும் நோக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்கா அல்லது இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டது என்றே சந்தேகிக்கப்படும். அமெரிக்கா அல்லது இஸ்ரேலினால் தமது நாடு எந்த நிலையிலும் திடீரெனத் தாக்கப்படலாம் என்ற மனோநிலை இப்போது ஒவ்வொரு ஈரானியரிலும்  ஏற்பட்டுள்ளது.


இஸ்ரேல் அல்லது அமெரிக்காவினால் ஈரானின் முக்கிய தலைவர்கள் மீது எதிர்பாராத இராணுவத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்படலாமென்று அந்நாட்டுத் தலைவர்கள் கருதுவதோடு ஈரானின் அணு உலைகள் மீது மேற்கு நாடுகளின் உளவுத்தாபனங்கள் மற்றும் இராணுவங்கள் இணைந்து திட்டமிட்ட கூட்டுத் தாக்குதலொன்றை மேற்கொள்ளலாமென ஈரான் தலைவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். அவ்வாறானதொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்துவகையான முன்னேற்பாடுகளும் ஈரானினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயதுல்லா அலி குமைனி

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி குமைனி நாட்டைப் பாதுகாப்பதற்கு தயார்நிலையில் இருக்குமாறு அந்நாட்டின் இராணுவத் தளபதிகள் மற்றும் படைத்தரப்பினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து இராணுவத் தளபதி ஜெனரெல் மொஹமட் அலி ஜபாரி தனது படையினரை தயாரக இருக்குமாறு விடுத்த உத்தரவு அந்நாட்டின் இராணுவம் எந்த நிலையிலும் போர் ஒன்றை எதிர்கொள்ளலாம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை நாடு முழுவதிலுமுள்ள இராணுவத்தின் பாதுகாப்பான மறைவிடங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு அந்நாட்டின் புரட்சிப் படைப் பிரிவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். எதிரி நாட்டின் தாக்குதலகளிலிருந்து அவ் ஆயுதங்களைப்  பாதுகாக்கவும், பதில்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுமே இம்முன்னேற்பாடு மேற்கொள்ளப்படுகிறது. நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள், பாரிய வெடிகுண்டுகள், ஆட்டிலரிகள் மற்றும் படையினரை ஈரான் அதன் முக்கிய நிலைகளில் நிறுத்தியுள்ளதாக மேற்கு நாட்டு உளவுத்துறை ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர்.


ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள மேலதிக தடைகள் சர்வதேச மசகு எண்ணெயின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டுபண்ணுமென அமெரிக்க வங்கியின் ஆய்வாளர் ஜே. பி. மோர்கன் அவ்வங்கியின் வாராந்த எண்ணெய்ச் சந்தை தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறானதொரு தடை உலகப் பொருளாதாரத்தை மேலும் மோசமடையச் செய்யுமெனவும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானுடைய எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்யும் பட்சத்தில் உலக சந்தையில் எண்ணெயின் விலை இரு மடங்கை விட அதிகரித்து உலக பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யுமென ஈரானும் மேற்கை எச்சரித்துள்ளது. ஏனெனில், மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈரானுக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு.


அமெரிக்க சக்திவள தகவல் அமைப்பின் 2011ம் ஆண்டு ஜனவரி மாத தகவலின் படி ஈரான் 137 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளத்தை கொண்டுள்ளதென நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. (ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் என்பது கிட்டத்தட்ட 159 லீட்டருக்குச் சமனாகும்.)  உலக எண்ணெய் வள நாடுகளுடன் ஈரானை ஒப்பிடும் போது 9.3% இருப்பையும், ஒபெக் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுடன் ஒப்பிடும் போது 12%க்கும் அதிகமான இருப்பையும் அந்நாடு கொண்டுள்ளது.


2010ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஒரு நாளைக்கு ஏறக்குறைய 2.2 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெயை ஈரான் ஏற்றுமதி செய்துள்ளது. எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கடந்த வருடம் மாத்திரம் ஈரான் கிட்டத்தட்ட 73 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றது. உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் ஈரான் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சவூதி அரேபியாவும், இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது. ஐரோப்பா  கடந்த வருடம் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 450,000 பீப்பாய் மசகு எண்ணெயை ஈரானிடமிருந்து கொள்வனவு செய்தது. இது ஈரானுடைய எண்ணெய் ஏற்றுமதியில் 1/5 பங்கை விட சற்று அதிகமாகும். ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் 70%யை கொள்வனவு செய்கிறது. எஞ்சிய பகுதி கிரேக்கம், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளால் கொள்வனவு செய்யப்படுகிறது.


ஈரான் மீதான பொருளாதாரத்தடை அமுலுக்கு வர முன்னரே ஈரானே அதன் முக்கிய ஐரோப்பிய ஏற்றுமதி நாடுகளுக்கு மசகு எண்ணெயை ஏற்றுமதி செய்வதை நிறுத்திக்கொண்டால், உலக சந்தையில் இப்போது எதிர்பார்ப்பதை விட அதிகமான விநியோக இழப்பு ஏற்படும். ஐரோப்பாவினுடைய வர்த்தகத் தடை அமுலுக்கு வரும் காலத்தைக் கணிக்கும் போது அத்தடை அமுலுக்கு வர முன்னரே ஈரான் அதன் முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு மசகு எண்ணெயை ஏற்றுமதி செய்வதை நிறுத்தக்கூடும். அவ்வாறானதொரு சாதகமான கால இடைவெளி ஈரானுக்கு உள்ளது. யதார்த்தமாகச் சொல்வதானல் ஈரானே அவ்வாறானதொரு தடையை அவசரமாக அறிவித்தால் கூட அது ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஈரானையும் கூட்டாகப் பாதிக்கும்.


பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் நிறுத்திவிட்டு இத்தாலி, ஸ்பெய்ன், கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஈரான் முயற்சிக்கக்கூடும். ஏனெனில் இவையே ஈரானின் பிரதான ஏற்றுமதி நாடுகளென்பது குறிப்பிடத்தக்கது. எண்ணெயின் விலை உலக சந்தையில் சடுதியாக அதிகரிக்குமாயின் ஐரோப்பிய ஒன்றியம் அவ்வாறானதொரு நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். ஏனெனில் குறிப்பாக இத்தாலி, ஸ்பெய்ன், கிரேக்கம்  போன்ற நாடுகளின் பொருளாதாரம் ஏற்கனவே சரிவடைந்து விட்டது. ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் மொத்தமாக இணைந்து ஈரானின் எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்ய முன்வராமை அவ் ஒன்றியத்தின் பலவீனத்தையும், அந்நாடுகளுக்கிடையிலான முரண்பாட்டையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சர்வதேச பொருளாதாரம் குறிப்பாக மேற்கு பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் மீதான தடை உலக சக்திவள சந்தையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


ஈரான் மீதான தடை சர்வதேச உலக எண்ணெய் சந்தையில் பாரிய தாக்கத்தைச் செலுத்துமென்பது நிச்சயம். ஏனெனில், இவ்வாண்டில் ஏற்கனவே எண்ணெய்ச் சந்தையில் நெருக்கடி நிலை இருந்த சூழ்நிலையிலேயெ லிபியாவின் எண்ணெய் வயல்களும் தகர்க்கப்பட்டு அதன் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானின் மீதான தடை மசகு எண்ணெய்க்கான விலையை மேலும் அதிகரிக்கச் செய்யவே வழிவகுக்கும். ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட கிரீஸ், ஸ்பெய்ன், இத்தாலி போன்ற நாடுகள் இத்தடையினால் எண்ணையின் விலை அதிகரிக்குமென அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்து போரொன்றைத் தொடுப்பதற்கு இரு காரணங்களுண்டு. முதலாவது இஸ்ரேலுக்கு நிகரான இராணுவ பலத்தோடு மற்றொரு நாடு மத்திய கிழக்கில் தோற்றம் பெறுவதை இவ்விரு நாடுகளும் விரும்பவில்லை. ஏனெனில், அவ்வாறானதொரு நிலை எதிர்காலத்தில் இஸ்ரேலின் இருப்பையே கேள்விக்குள்ளாகும். உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் என்ற நாட்டை நீக்கவேண்டுமென்ற கொள்கையை ஈரான் கொண்டுள்ளதுடன் அதைப் பகிரங்கமாக அந்நாட்டின் தலைவர்கள் தெரிவிப்பதை இஸ்ரேலால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இஸ்ரேலுக்கும் முஸ்லிம் நாடுகளுக்குமிடையில் எதிர்காலத்தில் யுத்தமொன்று ஏற்பட்டு பிராந்தியத்தில் பதற்றம் தோன்றும் சூழ்நிலையில் ஈரான் அணு குண்டுகளை வைத்திருந்தால் அவை இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்துமென இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது. எனவே ஆரம்பத்திலேயே ஈரானின் அணு ஆயுத ஆற்றலை அழிக்க வேண்டுமென அது விரும்புகிறது. இரண்டாவது ஈரானுடைய எண்ணெய் வளத்தை அபகரிக்கும் நோக்கம் இவ்விரு நாடுகளுக்குமுள்ளது. இதனை விட ஈரானின் அணு ஆயுத ஆற்றலை அழிப்பதே இஸ்ரேலின் இப்போதைய முதன்மை நோக்கமாகும்.


ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டாக தாக்குதலொன்றைத் தொடுக்கும் போது மன்னர் அமைப்பு ஆட்சி முறையைக் கொண்ட மத்திய கிழக்கின் சில முஸ்லிம் நாடுகளும் அமெரிக்காவுக்கு சார்பான கொள்கையைப் பின்பற்றுவதோடு தனது படைத்தளங்களைப் பயன்படுத்தவும் அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கும். எனினும், பகிரங்கமாக ஆதரவு வழங்குவதைத் தவிர்த்து மறைமுகமாக ஆதரவு வழங்க இந்நாடுகளின் தலைவர்கள் முன்வருவார்கள். ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியின் தாக்கம் தமது நாட்டைத் தாக்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவே இவ்வாறான தீர்மானத்தை அந்நாடுகளின் தலைவர்கள் மேற்கொள்வார்கள்.


ஹாலிக் அல் - அர்ஷத்

30 Nov 2011

முஸ்லிம் உலகின் இன்றைய அரசியல் நகர்வுகள்


கடந்த எட்டு மாதங்களாக சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிரிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள்  எடுப்பதை  முடிவுக்கு கொண்டுவரவும், சிரியாவின் உள்விவகாரங்களில் மேற்கின் தலையீடுகளை தவிர்க்கும் நோக்குடனும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை அமுல்படுத்த அறபு லீக் தீர்மானித்தது. இதற்கான தீர்மானம் கடந்த சனியன்று கெய்ரோவில் வைத்து மேற்கொள்ளப்பட்டது. அந்நாட்டின் உள்விவகாரங்களில் வேறு நாடுகள் குறிப்பாக மேற்கு தலையிடுவதைத் தவிர்க்க அறப் லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. அறபு லீக் இந்த விஷயத்தில் வினயமுடன் செயற்படாவிட்டால் வேறு நாடுகளின் தலையீட்டை சிரியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடந்த எட்டு மாதங்களாகத் தொடரும் மனிதப் படுகொலைகளை நிறுத்துவதோடு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவித்து அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இணங்குமாறு பஷர் அல் அசாதின் அரசாங்கத்திற்கு அறபுலீக்கின் வெளிநாட்டமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், சிரிய அரசாங்கம் இது வரை எவ்விதமான சாதகமான சமிக்ஜைகளையும் வெளிப்படுத்தவில்லை.

ஐக்கியநாடுகள் சபையும் சிரியா தொடர்பான அறிக்கையொன்றை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அரசுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சிரிய அதிகாரிகள் மற்றும் படையினர் வன்முறைகளைக் கையாண்டதாக அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தின் ஆரம்பப் பகுதி வரையில் 256 சிறுவர்கள் அரசாங்கத்தினால் கொல்லப்பட்டுள்ளதாகவும் சில சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, மேற்கு நாடுகள் போன்றவை சிரியாவின் விவகாரங்களை மிகக்கவனமாக அவதானித்து வருகிறது. அறபு லீக்கின் கோரிக்கைகள் அனைத்தையும் சிரிய அரசாங்கம் புறக்கணிக்கும் பட்சத்தில் லிபியா மீது நேட்டோ அமைப்பு மேற்கொண்ட இராணுவத்தாக்குதல்ககளை ஒத்த இராணுவ நடவடிக்கைகள் சிரியாவின் மீதும் மேற்கொள்ளப்படலாமென முஸ்லிம் நாடுகள் அச்சம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே அறப் லீக்கின் உறுப்பினரல்லாத துருக்கி கூட அவ் அமைப்பின் தீர்மானத்தை வரவேற்றுள்ளதுடன் அவ்வாறானதொரு பொருளாதாரத்தடையை தமது நாடும் கடைப்பிடிக்குமென அறிவித்துள்ளது.




அறப் ஷ்பிரிங் எனப்படும் புரட்சி ஆரம்பமாகிய டியூனீஷியாவில் இடம்பெற்ற தேர்தலில் அந்நஹ்ழா இஸ்லாமியக் கட்சி 41% வீதமான வாக்குகளைப் பெற்று 89 ஆசனங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மொரோக்கோவில் இடம்பெற்ற தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான இஸ்லாமியக் கட்சி அதிகளவான வாக்குகளைப் பெற்று முன்னணியிலுள்ள அதேவேளை அக்கட்சி அந்நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக கூட்டரசாங்கமொன்றை அமைக்கவும் தீர்மானித்துள்ளது. எகிப்தில் கடந்த திங்கட்கிழமை தேர்தல் ஆரம்பித்துள்ளது. இத்தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அமோக வெற்றியீட்டுமென அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமியவாதிகளின் அரசியல் ரீதியிலான வெற்றிகளின் வரிசையில் இன்னும் பல நாடுகளை இணைக்க முடியும். யெமனில் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் அரசாங்கம் பதவி விலகித் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் யெமனின் மறுசீரமைப்புக்கான கூட்டமைப்பும் அதிகளவு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியீட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்சியும் இஸ்லாமியக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவிலும் ஜனநாயகம் ஏற்பட்டு தேர்தல்கள் நடைபெறும் போது இவ்வாறானதொரு நிலையே ஏற்படும். முஸ்லிம் நாடுகளில் ஜனநாயக நீரோட்டம் ஏற்பட்டு தேர்தல்கள் சுமூகமாகவும், நீதியாகவும் இடம்பெற்றால் இஸ்லாமியக் கட்சிகள் அமோக வாக்குகளைப் பெற்று முன்னணியிலுள்ளது என்ற செய்திகளையே நாம் ஊடகங்களில் கேட்கக்கூடியதாக இருக்கும்.

அறபுலகில் இஸ்லாமியக் கட்சிகள் பெற்றுவரும் வெற்றிகளையும், அக்கட்சிகளுக்கு மக்களிடையே உள்ள  செல்வாக்கையும் அவதானிக்கும் மேற்கு, இவ் அரசியல் மாற்றம் தொடர்பாக தங்களுக்கிடையே அதிகளவான பரஸ்பர கருத்துப்பரிமாறல்களை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் அறபுலகில் இதுவரை மேற்கு சார்ந்து செயற்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இது தொடர்ச்சியான அதிர்ச்சிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  அரசியல் அவதானிகளின் கருத்துப்படி இந்த அறப் ஷ்பிரிங் (Arab Spring) ஆனது இஸ்லாமிக் வின்டர் (Islamic Winter) ஒன்றிற்கு இட்டுச் செல்லுமென எதிர்வுகூறுகின்றனர்.


             வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் எகிப்தியர்

செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் இஸ்லாம் பற்றி மிகவும் மோசமாக மேற்கு விமர்சித்ததைப் போன்று இப்போதும் இஸ்லாத்தின் மீது சேறுபூசும் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள். இத்தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமியவாதிகள் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவார்களென்ற தோற்றத்தை உருவாக்குவதற்கான பிரச்சாரத்தை மேற்கத்தேய ஊடகங்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. மேற்கத்தேய ஊடகங்களின் இத்தகைய தவறான பிரச்சாரங்களால் வழிநடாத்தப்படுவோர் இஸ்லாமியவாதிகளை பிழையான கண்ணோட்டத்துடனேயே நோக்குகின்றனர். அறபுலகில் தற்போது ஜனநாயக அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்ற இஸ்லாமியவாதிகள் இதுவரை காலமும் மேற்கத்தேயத்தை விசுவாசம் கொண்ட அறபுலகின் சர்வாதிகார ஆட்சியாளர்களாலும் பிழையாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டார்கள். செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் மேற்கு இஸ்லாத்தின் மீது பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் மேற்கொண்ட மனிதாபிமானமில்லாத தாக்குதல்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அறபுலகின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் தங்களது எதிரணியினரான இஸ்லாமியவாதிகளை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற போர்வையில் மிகக் கடுமையாகத் தாக்கினார்கள். இஸ்லாமிய அமைப்புக்கள் பலவற்றைத் தடை செய்ததோடு அவ் அமைப்பைச் சேர்ந்த பலரை சித்திரவதை செய்து சிறையிலடைத்தார்கள், இன்னும் சிலரை வகை தொகையின்றி கொலை செய்தார்கள். இஸ்லாமியவாதிகளைத் தீவிரவாதிகள் என வரைவிலக்கணப்படுத்தி அவர்களை மனிதாபிமானமில்லாமல் நடாத்தியமையினாலேயே அறபு சர்வாதிகாரிகளுக்கு மேற்கத்தேய அரசுகள் ஆதரவு கொடுத்ததோடு அவர்கள் இதுவரை ஆட்சியிலும் நீடிக்க முடிந்தது.

முஸ்லிம் நாடுகளில் தமக்குச் சார்பான பொம்மை அரசுகளை நிறுவுவதன் மூலம் அந்நாடுகளின் வளங்களை இலகுவாகக் கொள்ளையடிக்கும் நவீன காலனித்துவத்தை இஸ்லாமியவாதிகள் கேள்விக்குள்ளாக்குவதனாலேயே அவர்களை மேற்கு எதிர்த்து வருகிறது. இதனாலேயே இதுவரை காலமும் அவர்கள் பிழையான வரைவிலக்கணத்துக்குள்ளானார்கள். நீதியான, நேர்மையான ஆட்சியாளர்கள் அறபுலகில் தோற்றம் பெறுவது மேற்கின் வீழ்ச்சிக்கான அத்திவாரமாக அமையுமென்பதை மேற்கத்தேயர்கள் நன்கு புரிந்து வைத்தமையினாலேயே அவ்வாறனதொரு நிலை ஏற்படுவதைத் தவிர்த்து வந்தனர்.

முஸ்லிம் நாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்தும் வைத்திருக்க மேற்கு பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடிக்கும். இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும் போது அவர்களிடையே பிரிவினையைத் தோற்றுவிக்க கபீலா என்று சொல்கின்ற கோத்திர ரீதியிலான வேறுபாட்டை அதிகரிக்கவும், ஷீயா - சுன்னி என்ற வேறுபாட்டை கூர்மையாக்கவும் மேற்கு முயற்சிக்கும். இவ்விரு பிரதான முரண்பாடுகள் தோன்றும் போது அவற்றுக்கான சுமூகமான தீர்வுகளைக் காண்பதிலேயே இஸ்லாமியவாதிகளின் வெற்றி தங்கியிருக்கிறது. இதேவைளை மொழி, மதம், கலாசாரம், பூகோளவியல் போன்ற பல காரணிகளால் பிணைக்கப்பட்ட ஒற்றுமைகளும் இஸ்லாமியவாதிகளிடையே உண்டு.



இஸ்லாமியவாதிகள் அரசியலுக்கு புதிதாக பிரவேசித்தவர்கள் எனவும், அரசியல் பற்றிய அனுபவம் இல்லாத இவர்கள் இலகுவாக ஏமாறி விடுவார்களென சிலர் நினைக்கின்றனர். உஸ்மானிய சாம்ராஜ்யம் 1924ம் ஆண்டு வீழ்ந்ததிலிருந்து இஸ்லாமியவாதிகள் முஸ்லிம் உலகில் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்ற வரலாறு இவர்களுக்குத் தெரியாது. அதிகமான இஸ்லாமிய இயக்கங்கள் பலமான எதிரணியாக இருந்து வந்துள்ளன. 1940ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் இவர்கள் பங்குபற்றியுள்ளனர். தேசியவாதிகள், மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டரசாங்கமும் அமைத்துள்ளனர். இதற்கு சூடான், ஜோர்டான், யெமன் மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அல்ஜீரியாவில் 1991ம் ஆண்டுத் தேர்தலில் இஸ்லாமியவாதிகள் வெற்றிபெற்ற போதும் இராணுவத் தலையீட்டினால் ஆட்சியைக் கைப்பற்ற அவர்களால் முடியவில்லை. 1996ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி செய்தபோதும் மேற்கினால் அவர்கள் தீவிரவாதிகளென்ற முத்திரை குத்தப்பட்டு வீழ்த்தப்பட்டார்கள். பலஸ்தீனில் 2006ம் ஆண்டுத் நடைபெற்ற தேர்தலில் மக்களின் அமோக ஆதரவினால் ஹமாஸ் தெரிவுசெய்யப்பட்டும் மேற்கினால் அவ்வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. எனவே, அவர்களை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற நோக்கில் ஹமாஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மேற்கின் ஆதரவுடன் இஸ்ரேலினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

இஸ்லாமியவாதிகளின் ஆட்சியிலுள்ள மற்றுமொரு நாடுதான் துருக்கி. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கடைசி நகரம் இருந்த இடம்தான் இன்றைய துருக்கி. துருக்கியின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 2002ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி தமது கட்சியை இஸ்லாமியக் கட்சியென்றோ அல்லது அக்கட்சியைச் சார்ந்தவர்கள் தங்களை இஸ்லாமியவாதிகள் என்றோ வர்ணிப்பதில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களாக துருக்கியை ஆட்சி செய்யும் இவர்கள் ஏனைய இஸ்லாமியக் கட்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். துருக்கியில் இவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் அங்கே இஸ்லாத்தின் எழுச்சியையும், பல் கட்சி ஜனநாயகத்தையும், குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியையும் அவதானிக்க முடிகிறது. அவர்களது இராஜதந்திர ரீதியான அரசியல் நகர்வினால் மேற்கினால் தவறாக சித்தரிக்கப்படுவதிலிருந்து பெருமளவு விடுபட்டுள்ளார்கள்.  இது அவர்களின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகும். நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் திட்டமிட்ட அடிப்படையிலான இவ்வகை அரசியல் நகர்வுகளினால் ஏனைய நாடுகளிலுள்ள இஸ்லாமியக் கட்சிகளும் ஈர்க்கப்பட்டுள்ளன. இவ்வகை அரசியல் செயற்பாடுகளே இன்றைய காலத்தின் தேவையாகவுமுள்ளது.

الْحَرْبُ خُدْعَةٌ 'அல் ஹர்பு குத்ஆ' என்று நபிமொழி ஒன்றுள்ளது. யுத்தம் என்பதே தந்திரோபாயமாகும் என்பதே இதன் அர்த்தம். போரில் இழப்புக்களைத் தவிர்த்து எவ்வாறு இலகுவாக வெற்றியடையலாம் எனத்திட்டமிடுவதே இதன் விளக்கமாகும். யுத்தத்தின் போது தந்திரோபாயத் திட்டங்களை வகுத்து அதனடிப்படையில் செயற்படவேண்டுமென்பதை மேற்சொன்ன நபிமொழி எமக்கு கற்றுத்தருகிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த நபிமொழியை நமது அரசியலுடன் கூட ஒப்பிட்டு நோக்க முடியும். இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது அரசியல் ரீதியான ஆக்கிரமிப்புப் போரையை தொடுக்கிறது. முஸ்லிம் நாடுகளின் மீதான மேற்கின் திட்டமிட்ட நவீன அரசியல் ஆக்கிரமிப்பை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும். அரசியல்  என்பது இன்று தந்திரோபாயங்களால் நிறைந்தது என்பதை சிலரால் இன்னும் உணர முடிவதில்லை. வெறுமனே உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக அரசியல் ரீதியான முடிவுகளை அல்லது கருத்துக்களை வெளியிடுவதைப் பார்க்கலாம். 


                            றாஷித் அல் கனூஷி

டியூனீஷியாவின் அந்நஹ்ழா கட்சியின் தலைவர் றாஷித் அல் கனூஷி அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்றின் போது அவர் குறிப்பிட்ட கருத்துக்களை சிலரால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது தாம் கிலாபத் சிந்தனைக்கு எதிரானாவர் என்று அந்த நேர்காணலிலே அவர் குறிப்பிட்டிருந்தார். மேற்கு ஊடகங்கள், மேற்கு அரசியல் வாதிகள் இஸ்லாமியவாதிகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் அவர்களின் ஒவ்வொரு செவ்விகளையும் நுணுக்கமாகவே அணுகுகின்றார்கள். அந்த நேர்காணலில் றாஷித் அல் கனூஷி தன்னை ஒரு இஸ்லாமியவாதி என்று காட்டிக்கொள்ளாமையினால் அவர் கூறிய சில கருத்துக்கள் இலங்கை முஸ்லிம் சகோதர்களிடையேயும் சில வாதங்களைத் தோற்றுவித்துள்ளது. அவர் உண்மையிலேயே ஒரு இஸ்லாமியவாதியா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இந்தக் குழப்பம் எங்களுக்கு மட்டுமல்ல, மேற்கத்தேயர்களுக்கும்தான். மேற்கத்தேயர்களும் நேர்காணலின் போது றாஷித் அல் கனூஷி தன்னை ஒரு இஸ்லாமியவாதியாக அடையாளப்படுத்துவாரென நினைத்து ஏமாந்து போய்விட்டனர். அவர் தன்னை ஒரு இஸ்லாமியவாதியாக அடையாளப்படுத்தியிருந்தால் இப்போது அவரையும், அவர் சார்ந்த கட்சியினரையும் இஸ்லாமியத் தீவிரவாதிகளாக மேற்கு ஊடகங்கள் அடையாளப்படுத்தியிருக்கும். அக்கட்சியினருக்கும், மதச்சார்பற்ற கட்சிகளோடு அவர்கள் அமைத்துள்ள கூட்டணிக்குமிடையே பிரிவினைகளைத் தோற்றுவித்து மீண்டும் அந்நாட்டில் அரசியல் ரீதியான கொந்தளிப்பை உருவாக்கி மேற்கு சார்பான ஒருவரை ஆட்சியில் அமர்த்தவே மேற்கு விரும்புகிறது. ஆனால் அவர் இராஜதந்திர ரீதியாக மேற்கத்தேயர்களை அணுகியுள்ளார் என்பதை சிலரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. மேற்கு ஊடகங்களுக்கு தங்களது அரசியல் நகர்வுகள் பற்றி தப்பபிப்பிராயம் வளர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை அவர் தடுத்துவிட்டார். இதனால் மேற்கத்தேயர்கள் இராஜதந்திர ரீதியில் தோல்வியடைந்து விட்டார்கள். இன்றைய நிலையில் இஸ்லாமியவாதிகள் தங்களது ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் இராஜதந்திர ரீதியில் திட்டமிட்ட அடிப்படையிலேயே மேற்கொள்கின்றனர்.

ஹாலிக் அல் - அர்ஷத்

25 Nov 2011

அமெரிக்க அரசியலில் வோல்ஸ்ட்ரீட் போராட்டத்தின் வகிபாகம்

அமெரிக்காவின் Wall Street இல் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் நடக்குதாமே. ஆர்ப்பாட்டத்தை விடுங்க, அது என்ன Wall Street? வித்தியாசமான பெயரா இருக்கே! அதுக்குப்பின்னாலயும் சுவாரஷ்யமான வரலாறு ஒன்று இருக்காம். பிரிட்டிஷ் மற்றும் சுதேச அமெரிக்கர்களின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாக்க டச்சு ஆக்கிரமிப்பாளர்கள் 1653ம் ஆண்டு 12 தூண்களுடைய தடுப்புச்சுவரொன்றை நிறுவினார்களாம். தடுப்புச்சுவர் இடிக்கப்படும் வரை கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் அத்தடுப்புச்சுவர் உறுதியாகவே இருந்ததாம். பிறகு 1685ம் ஆண்டு தடுப்புச்சுவரை (Wall) இடித்து விட்டு அதே இடத்திலே வீதி (Street) அமைத்தார்களாம். அதிலிருந்து அதுக்கு Wall Street என்று பெயர் வந்ததாம்...



ஆர்ப்பாட்டக்காரர்கள் Wall Street யை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா? அதன் கேந்திர முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டுதான். நியூயோர்க் நகரத்தின் வர்த்தக மையம்தான் இந்த வோல்ஸ்ட்ரீட். இங்குதான் நியூயோர்க்கின் பங்குப்பரிவர்த்தனை (Stock Exchange) இடம்பெறுகிறது. உலகில் மிகவும் பாரியளவிலான பங்குப்பரிவர்த்தனை நியூயோர்க்கின் பங்குச்சந்தையிலேயே இடம்பெறுகிறது. பங்குப்பரிவர்த்தனையில் ஈடுபடும் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமையகங்கள் கூட இங்குதான் உள்ளது. NASDAQ, New York Mercantile Exchange, New York Board of Trade (ICE Futures US) போன்ற நிறுவனங்களின் தலைமையகமும் இங்குதான் அமையப்பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இது சுற்றுலாவுக்கும் பெயர்போன இடம்.

வேலை இன்மை, சமூக ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு , அமெரிக்க அரசியலில் தனியார் நிறுவனங்களின் அளவுக்கதிகமான தலையீடு என்பவற்றை எதிர்த்து கடந்த செப்டம்பர் 17ம் திகதி வோல்ஸ்ட்ரீட் போராட்டம் ஆரம்பமானது. வோல்ஸ்ட்ரீட் இல் ஆரம்பமான போராட்டம் இப்போது அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளதோடு ஐரோப்பாவையும் ஆக்கிரமித்துள்ளது. தங்களது கருத்துக்களை சுதந்திரமாகத் தெரிவிக்கும் உரிமையை அமெரிக்கா அதன் அடிமட்ட மக்களுக்கு வழங்க மறுக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசாங்கம் பலப்பிரயோகத்தைப் பயன்படுத்துகிறது.

கடந்த வாரம் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது அமெரிக்கப் பொலிசார் மிளகுத்தூள் கரைசலைத் தெளித்திருக்கிறார்கள். இச்சம்பவமானது சட்ட அமுலாக்கல் தொடர்பான வாதத்தை அமெரிக்க மக்களிடையே தோற்றுவித்துள்ளது. மாணவர்கள், சட்ட வல்லுனர்கள் போன்றோர் இச்செயலுக்கெதிராக தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் Occupy Wall Street இயக்கத்துக்கு மிகுந்த பிரபல்யத்தையும் புதியதொரு திருப்புமுனையையும் கொடுத்துள்ளது.


நாட்டில் மாறிமாறி ஆட்சிபீடமேறும் அரசாங்கங்கள் எப்போதும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்சார்ந்து செயற்படுவதையும், நாட்டு மக்கள் அனைவரையும் குறிப்பாக அடிமட்ட மக்களின் நலன் சார்ந்த எக்கொள்கைகளையும் அரசாங்கம் வகுப்பதில்லையென்பதையும் அமெரிக்காவின் அடிமட்ட மக்கள் நன்கு அறிந்தே வைத்திருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தின் இக்கொள்கைகளுக்கு எதிராக தமது கருத்துக்களை அமைதியான முறையில் வெளியிட மக்கள் சந்தர்ப்பமொன்றை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறான போராட்டமொன்றை எங்கே, எப்போது, எப்படி ஆரம்பிப்பது என்பதிலும் அதனை எவ்வாறு ஒன்றிணைப்பது என்பதிலும் அவர்களை ஒன்றிணைக்கக் கூடிய எந்தவொரு ஊடகமும் இருக்கவில்லை.

மத்திய கிழக்கில் தோன்றிய புரட்சியையடுத்து அவர்கள் பெற்றுக்கொண்ட வெற்றியை அவதானித்த அமெரிக்க மக்களுக்கு அப்புரட்சியின் வெற்றி உத்வேகத்தைக் கொடுத்தது. அது போன்றதொரு மாற்றம் தமக்கும் வேண்டுமென்று தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். எகிப்திய மக்களைப் போன்று தாங்களும் அமைதியாக தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். எகிப்தில் தோன்றிய அமைதியான புரட்சிக்கும் தம்முடைய புரட்சிக்குமிடையே ஒற்றுமை இருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். இதனை அவர்கள் Tahrir Square to Times Square (தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து டைம்ஸ் சதுக்கத்திற்கு) என வர்ணிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.  



அமெரிக்க மக்களின் இப்போராட்டம் சடுதியாக எதையும் சாதிக்காது விட்டாலும் இப்போராட்டமே வெற்றிதான். ஏனெனில், அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கு எதிராக தமது கருத்துக்களைத் தெரிவிக்க அந்நாட்டு மக்கள் ஒன்றிணைந்ததே முதல் வெற்றி. அநியாயமாக அடுத்த நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை அந்நாட்டு மக்கள் விரும்புவதில்லை. இருந்தும் நாட்டில் மாறிமாறி ஆட்சியைக்கைப்பற்றும் இரு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிப்பதைத் தவிர வேறு தெரிவு அவர்களுக்கு இதுவரை இருக்கவில்லை. ஏனெனில் அமெரிக்க வரலாற்றில் ஜனநாயக்கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளே மாறிமாறி ஆட்சியமைத்து வந்துள்ளன. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இப்போராட்டத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முதலாளித்துவம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அடுத்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் வரை இப்போராட்டம் சுமூகமாகத் தொடர்ந்தால் வோல்ஸ்ட்ரீட்  இயக்கம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் பலம்மிக்க மூன்றாவது அணியாகத் தேர்தலைச் சந்திக்கும். அடிமட்ட மக்கள் அனைவரும் இம்மூன்றாம் அணியையே இத்தேர்தலில் ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அத்தகைய நிலையில் அமெரிக்க அரசியல் வரலாற்றில் மாற்றமொன்று ஏற்படுவதை எதிர்பார்க்கலாம்.



அமெரிக்க மக்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள். தற்போதைய ஜனாதிபதி ஒபாமா ஜனநாயக்கட்சியின் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டதும் மக்கள் அவரிடமிருந்து நிறையவே மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். அவரது தேர்தல் சுலோகம் கூட மாற்றம் பற்றியதாகவே இருந்தது. அமெரிக்க மக்களைப் போலவே ஏனைய நாட்டு மக்களும் அவரின் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். ஆபிரிக்கத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்த ஒபாமா ஆபிரிக்காவையும் ஏனைய நாடுகளையும் சுரண்டுவதற்கு எதிராகச் செயற்படுவார் என்றே பெரும்பாலானோர் நம்பினர். ஆனால், அதற்கு மாற்றமாக அவரும் ஏனைய ஜனாதிபதிகளைப் போலவே தனது அரசியல் திட்டங்களை வகுத்தார். சுருக்கமாகச் சொல்வதானால் அமெரிக்காவில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் வெளியுறவுக் கொள்கை எப்போதும் ஒன்றாகவே இருக்கும். அது போலவே அதன் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் முதலாளித்துவ வர்க்கத்தை திருப்திப்படுத்துவதாகவே அமையும். அமெரிக்காவின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளும் முதலாளித்துவ சக்திகளினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக யூதர்களுக்கு அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்களவு செல்வாக்குண்டு. அவர்களின் பிடியிலிருந்து அமெரிக்க அரசியலை இலகுவில் மீட்டெடுக்க முடியாது. ஆனால் மக்கள் சக்தி ஒன்றுதிரட்டப்படும் போது அவர்களின் ஆழமான பிடி தளர வேண்டியது தவிர்க்க முடியாதது.

ஹாலிக் அல் - அர்ஷத்