14 May 2011

தருஸ்மன் அறிக்கையை தவறாகப் பயன்படுத்தும் தமிழ் அரசியல் சமூகம்.


ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையே இலங்கையிலும், புலம்பெயர் இலங்கை சமூகங்களிடையேயும் இன்று அதிகம் பேசு பொருளாக உள்ளது. இலங்கையிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் பெரும்பாலானவை அரசுக்கு சார்பானவையாகவும், புலம்பெயர் தமிழ் சமூகத்தால் நிர்வகிக்கப்படுகின்ற ஊடகங்கள் நிபுணர் குழு அறிக்கைக்கு சார்பாகவும் அதனைப் பாராட்டியும் கருத்துக்களை வெளியிடுகின்றன.


2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவுற்றதைத் தொடர்ந்து நாட்டில் இப்போது போதிய அமைதி நிலவுவதோடு மக்கள் நாட்டின் எப்பகுதிக்கும் பீதியில்லாமல் சென்றுவர முடிகிறது. ஆனால் இது வரை இலங்கை அரசாங்கத்தினால் இனப்பிரச்சினைக்கான எந்தத் தீர்வுத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்ற பின்னர் தீர்வுத்திட்டத்தில் கவனம் செலுத்தவேண்டிய அரசு வேறு விடயங்களில் தமது கவனங்களை செலுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. யுத்தக் குற்றங்கள் தொடர்பான  குற்றச்சாட்டுக்களால் அவை தொடர்பான பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு அரசாங்கம் தனது காலத்தையும், வளங்களையும் பயன்படுத்துகின்றமையானது யுத்தம் முடிவுற்ற நிலையிலேயே  நாடு தொடர்ந்தும் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசின் உயரதிகாரிகள், உயர் இராணுவ உத்தியோகத்தர்கள் அடிக்கடி  வெளிநாடுகளுக்கு செல்வதாலும் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவும் வேண்டி பெருமளவான நிதிகள் ஒதுக்கப்படுவதனால் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஏற்பட்ட இராணுவச் செலவுகளே தொடர்ந்தும் உள்ளது.



கடந்த 30 வருட யுத்தத்தினால் இலங்கையின் எந்த சமூகமும் எந்த நன்மையையும் பெற்றுக்கொள்ளவில்லை. அக்கால இடைவெளியில் விடுதலைப்புலிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகளும் தோல்விகளும் வெறும் வரலாறாகவே பதியப்படுகின்றது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமது சொந்த விருப்பின் அடிப்படையில் செயற்படமுடியாமல் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இனியாவது தமிழ் அரசியல் சமூகத்தினதும், இலங்கை வாழ் ஏனைய சமூகங்களினதும் நலன் சார்ந்து தூர நோக்கோடு முடிவுகளை வகுக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளுடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற யோசனையை விடுதலைப்புலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தமது ஏனைய உள்நோக்கங்களை நிறைவு செய்வதற்காகவே விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வந்தனர்.

இலங்கை அரசினால் தமிழ் சமூகத்துக்கு புலிகளின் ஊடாக வழங்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் அவர்களால் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித் தீர்வை அப்பேச்சுவார்த்தைகளினூடாக சிறுபான்மை சமூகங்கள் பெற்றிருக்க முடியும். அப்பேச்சுவார்த்தைகளை விடுதலைப்புலிகள் உரிய முறையில் பயன்படுத்தத் தவறியதோடு மற்றுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை தனியான தரப்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கும் அவர்கள் முட்டுக்கட்டையாக இருந்தனர்.



இறுதிக்கட்ட யுத்தம் நடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  படுகொலைகளுக்காக அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தமிழ் சமூகம் குறிப்பாக புலம்பெயர் தமிழ் சமூகம் கைவிட்டு நிபுணர் குழு அறிக்கையை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்தலாமென சிந்திக்க வேண்டும். இந்நிபுணர் குழு அறிக்கையின் மூலம் இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகத்தினூடாக அழுத்தங்களைக் கொடுத்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை வகுப்பதற்கு சர்வதேச சமூகத்தை தூண்ட வேண்டும். இவ்வாறான நல்லதொரு அரிய வாய்ப்பை தமிழ் சமூகம் கைநழுவ விடுகின்ற போது சமாதானப் பேச்சுவார்த்தையின் பின்னரான மற்றுமொரு சந்தர்ப்பத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவே அமையும். இச்சந்தர்ப்பத்தை தவற விடுவதனூடாக இனப்பிரச்சினைத் தீர்வொன்றுக்கான காலம் நிர்ணயிக்கப்படாத மற்றுமொரு சந்தர்ப்பத்திற்காக அனைவரும் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

ஹாலிக் அல் - அர்ஷத்

Related Posts Plugin for WordPress, Blogger...