30 Nov 2011

முஸ்லிம் உலகின் இன்றைய அரசியல் நகர்வுகள்


கடந்த எட்டு மாதங்களாக சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிரிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள்  எடுப்பதை  முடிவுக்கு கொண்டுவரவும், சிரியாவின் உள்விவகாரங்களில் மேற்கின் தலையீடுகளை தவிர்க்கும் நோக்குடனும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை அமுல்படுத்த அறபு லீக் தீர்மானித்தது. இதற்கான தீர்மானம் கடந்த சனியன்று கெய்ரோவில் வைத்து மேற்கொள்ளப்பட்டது. அந்நாட்டின் உள்விவகாரங்களில் வேறு நாடுகள் குறிப்பாக மேற்கு தலையிடுவதைத் தவிர்க்க அறப் லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. அறபு லீக் இந்த விஷயத்தில் வினயமுடன் செயற்படாவிட்டால் வேறு நாடுகளின் தலையீட்டை சிரியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடந்த எட்டு மாதங்களாகத் தொடரும் மனிதப் படுகொலைகளை நிறுத்துவதோடு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவித்து அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இணங்குமாறு பஷர் அல் அசாதின் அரசாங்கத்திற்கு அறபுலீக்கின் வெளிநாட்டமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், சிரிய அரசாங்கம் இது வரை எவ்விதமான சாதகமான சமிக்ஜைகளையும் வெளிப்படுத்தவில்லை.

ஐக்கியநாடுகள் சபையும் சிரியா தொடர்பான அறிக்கையொன்றை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அரசுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சிரிய அதிகாரிகள் மற்றும் படையினர் வன்முறைகளைக் கையாண்டதாக அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தின் ஆரம்பப் பகுதி வரையில் 256 சிறுவர்கள் அரசாங்கத்தினால் கொல்லப்பட்டுள்ளதாகவும் சில சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, மேற்கு நாடுகள் போன்றவை சிரியாவின் விவகாரங்களை மிகக்கவனமாக அவதானித்து வருகிறது. அறபு லீக்கின் கோரிக்கைகள் அனைத்தையும் சிரிய அரசாங்கம் புறக்கணிக்கும் பட்சத்தில் லிபியா மீது நேட்டோ அமைப்பு மேற்கொண்ட இராணுவத்தாக்குதல்ககளை ஒத்த இராணுவ நடவடிக்கைகள் சிரியாவின் மீதும் மேற்கொள்ளப்படலாமென முஸ்லிம் நாடுகள் அச்சம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே அறப் லீக்கின் உறுப்பினரல்லாத துருக்கி கூட அவ் அமைப்பின் தீர்மானத்தை வரவேற்றுள்ளதுடன் அவ்வாறானதொரு பொருளாதாரத்தடையை தமது நாடும் கடைப்பிடிக்குமென அறிவித்துள்ளது.




அறப் ஷ்பிரிங் எனப்படும் புரட்சி ஆரம்பமாகிய டியூனீஷியாவில் இடம்பெற்ற தேர்தலில் அந்நஹ்ழா இஸ்லாமியக் கட்சி 41% வீதமான வாக்குகளைப் பெற்று 89 ஆசனங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மொரோக்கோவில் இடம்பெற்ற தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான இஸ்லாமியக் கட்சி அதிகளவான வாக்குகளைப் பெற்று முன்னணியிலுள்ள அதேவேளை அக்கட்சி அந்நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக கூட்டரசாங்கமொன்றை அமைக்கவும் தீர்மானித்துள்ளது. எகிப்தில் கடந்த திங்கட்கிழமை தேர்தல் ஆரம்பித்துள்ளது. இத்தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அமோக வெற்றியீட்டுமென அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமியவாதிகளின் அரசியல் ரீதியிலான வெற்றிகளின் வரிசையில் இன்னும் பல நாடுகளை இணைக்க முடியும். யெமனில் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் அரசாங்கம் பதவி விலகித் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் யெமனின் மறுசீரமைப்புக்கான கூட்டமைப்பும் அதிகளவு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியீட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்சியும் இஸ்லாமியக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவிலும் ஜனநாயகம் ஏற்பட்டு தேர்தல்கள் நடைபெறும் போது இவ்வாறானதொரு நிலையே ஏற்படும். முஸ்லிம் நாடுகளில் ஜனநாயக நீரோட்டம் ஏற்பட்டு தேர்தல்கள் சுமூகமாகவும், நீதியாகவும் இடம்பெற்றால் இஸ்லாமியக் கட்சிகள் அமோக வாக்குகளைப் பெற்று முன்னணியிலுள்ளது என்ற செய்திகளையே நாம் ஊடகங்களில் கேட்கக்கூடியதாக இருக்கும்.

அறபுலகில் இஸ்லாமியக் கட்சிகள் பெற்றுவரும் வெற்றிகளையும், அக்கட்சிகளுக்கு மக்களிடையே உள்ள  செல்வாக்கையும் அவதானிக்கும் மேற்கு, இவ் அரசியல் மாற்றம் தொடர்பாக தங்களுக்கிடையே அதிகளவான பரஸ்பர கருத்துப்பரிமாறல்களை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் அறபுலகில் இதுவரை மேற்கு சார்ந்து செயற்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இது தொடர்ச்சியான அதிர்ச்சிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  அரசியல் அவதானிகளின் கருத்துப்படி இந்த அறப் ஷ்பிரிங் (Arab Spring) ஆனது இஸ்லாமிக் வின்டர் (Islamic Winter) ஒன்றிற்கு இட்டுச் செல்லுமென எதிர்வுகூறுகின்றனர்.


             வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் எகிப்தியர்

செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் இஸ்லாம் பற்றி மிகவும் மோசமாக மேற்கு விமர்சித்ததைப் போன்று இப்போதும் இஸ்லாத்தின் மீது சேறுபூசும் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள். இத்தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமியவாதிகள் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவார்களென்ற தோற்றத்தை உருவாக்குவதற்கான பிரச்சாரத்தை மேற்கத்தேய ஊடகங்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. மேற்கத்தேய ஊடகங்களின் இத்தகைய தவறான பிரச்சாரங்களால் வழிநடாத்தப்படுவோர் இஸ்லாமியவாதிகளை பிழையான கண்ணோட்டத்துடனேயே நோக்குகின்றனர். அறபுலகில் தற்போது ஜனநாயக அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்ற இஸ்லாமியவாதிகள் இதுவரை காலமும் மேற்கத்தேயத்தை விசுவாசம் கொண்ட அறபுலகின் சர்வாதிகார ஆட்சியாளர்களாலும் பிழையாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டார்கள். செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் மேற்கு இஸ்லாத்தின் மீது பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் மேற்கொண்ட மனிதாபிமானமில்லாத தாக்குதல்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அறபுலகின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் தங்களது எதிரணியினரான இஸ்லாமியவாதிகளை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற போர்வையில் மிகக் கடுமையாகத் தாக்கினார்கள். இஸ்லாமிய அமைப்புக்கள் பலவற்றைத் தடை செய்ததோடு அவ் அமைப்பைச் சேர்ந்த பலரை சித்திரவதை செய்து சிறையிலடைத்தார்கள், இன்னும் சிலரை வகை தொகையின்றி கொலை செய்தார்கள். இஸ்லாமியவாதிகளைத் தீவிரவாதிகள் என வரைவிலக்கணப்படுத்தி அவர்களை மனிதாபிமானமில்லாமல் நடாத்தியமையினாலேயே அறபு சர்வாதிகாரிகளுக்கு மேற்கத்தேய அரசுகள் ஆதரவு கொடுத்ததோடு அவர்கள் இதுவரை ஆட்சியிலும் நீடிக்க முடிந்தது.

முஸ்லிம் நாடுகளில் தமக்குச் சார்பான பொம்மை அரசுகளை நிறுவுவதன் மூலம் அந்நாடுகளின் வளங்களை இலகுவாகக் கொள்ளையடிக்கும் நவீன காலனித்துவத்தை இஸ்லாமியவாதிகள் கேள்விக்குள்ளாக்குவதனாலேயே அவர்களை மேற்கு எதிர்த்து வருகிறது. இதனாலேயே இதுவரை காலமும் அவர்கள் பிழையான வரைவிலக்கணத்துக்குள்ளானார்கள். நீதியான, நேர்மையான ஆட்சியாளர்கள் அறபுலகில் தோற்றம் பெறுவது மேற்கின் வீழ்ச்சிக்கான அத்திவாரமாக அமையுமென்பதை மேற்கத்தேயர்கள் நன்கு புரிந்து வைத்தமையினாலேயே அவ்வாறனதொரு நிலை ஏற்படுவதைத் தவிர்த்து வந்தனர்.

முஸ்லிம் நாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்தும் வைத்திருக்க மேற்கு பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடிக்கும். இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும் போது அவர்களிடையே பிரிவினையைத் தோற்றுவிக்க கபீலா என்று சொல்கின்ற கோத்திர ரீதியிலான வேறுபாட்டை அதிகரிக்கவும், ஷீயா - சுன்னி என்ற வேறுபாட்டை கூர்மையாக்கவும் மேற்கு முயற்சிக்கும். இவ்விரு பிரதான முரண்பாடுகள் தோன்றும் போது அவற்றுக்கான சுமூகமான தீர்வுகளைக் காண்பதிலேயே இஸ்லாமியவாதிகளின் வெற்றி தங்கியிருக்கிறது. இதேவைளை மொழி, மதம், கலாசாரம், பூகோளவியல் போன்ற பல காரணிகளால் பிணைக்கப்பட்ட ஒற்றுமைகளும் இஸ்லாமியவாதிகளிடையே உண்டு.



இஸ்லாமியவாதிகள் அரசியலுக்கு புதிதாக பிரவேசித்தவர்கள் எனவும், அரசியல் பற்றிய அனுபவம் இல்லாத இவர்கள் இலகுவாக ஏமாறி விடுவார்களென சிலர் நினைக்கின்றனர். உஸ்மானிய சாம்ராஜ்யம் 1924ம் ஆண்டு வீழ்ந்ததிலிருந்து இஸ்லாமியவாதிகள் முஸ்லிம் உலகில் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்ற வரலாறு இவர்களுக்குத் தெரியாது. அதிகமான இஸ்லாமிய இயக்கங்கள் பலமான எதிரணியாக இருந்து வந்துள்ளன. 1940ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் இவர்கள் பங்குபற்றியுள்ளனர். தேசியவாதிகள், மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டரசாங்கமும் அமைத்துள்ளனர். இதற்கு சூடான், ஜோர்டான், யெமன் மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அல்ஜீரியாவில் 1991ம் ஆண்டுத் தேர்தலில் இஸ்லாமியவாதிகள் வெற்றிபெற்ற போதும் இராணுவத் தலையீட்டினால் ஆட்சியைக் கைப்பற்ற அவர்களால் முடியவில்லை. 1996ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி செய்தபோதும் மேற்கினால் அவர்கள் தீவிரவாதிகளென்ற முத்திரை குத்தப்பட்டு வீழ்த்தப்பட்டார்கள். பலஸ்தீனில் 2006ம் ஆண்டுத் நடைபெற்ற தேர்தலில் மக்களின் அமோக ஆதரவினால் ஹமாஸ் தெரிவுசெய்யப்பட்டும் மேற்கினால் அவ்வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. எனவே, அவர்களை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற நோக்கில் ஹமாஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மேற்கின் ஆதரவுடன் இஸ்ரேலினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

இஸ்லாமியவாதிகளின் ஆட்சியிலுள்ள மற்றுமொரு நாடுதான் துருக்கி. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கடைசி நகரம் இருந்த இடம்தான் இன்றைய துருக்கி. துருக்கியின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 2002ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி தமது கட்சியை இஸ்லாமியக் கட்சியென்றோ அல்லது அக்கட்சியைச் சார்ந்தவர்கள் தங்களை இஸ்லாமியவாதிகள் என்றோ வர்ணிப்பதில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களாக துருக்கியை ஆட்சி செய்யும் இவர்கள் ஏனைய இஸ்லாமியக் கட்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். துருக்கியில் இவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் அங்கே இஸ்லாத்தின் எழுச்சியையும், பல் கட்சி ஜனநாயகத்தையும், குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியையும் அவதானிக்க முடிகிறது. அவர்களது இராஜதந்திர ரீதியான அரசியல் நகர்வினால் மேற்கினால் தவறாக சித்தரிக்கப்படுவதிலிருந்து பெருமளவு விடுபட்டுள்ளார்கள்.  இது அவர்களின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகும். நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் திட்டமிட்ட அடிப்படையிலான இவ்வகை அரசியல் நகர்வுகளினால் ஏனைய நாடுகளிலுள்ள இஸ்லாமியக் கட்சிகளும் ஈர்க்கப்பட்டுள்ளன. இவ்வகை அரசியல் செயற்பாடுகளே இன்றைய காலத்தின் தேவையாகவுமுள்ளது.

الْحَرْبُ خُدْعَةٌ 'அல் ஹர்பு குத்ஆ' என்று நபிமொழி ஒன்றுள்ளது. யுத்தம் என்பதே தந்திரோபாயமாகும் என்பதே இதன் அர்த்தம். போரில் இழப்புக்களைத் தவிர்த்து எவ்வாறு இலகுவாக வெற்றியடையலாம் எனத்திட்டமிடுவதே இதன் விளக்கமாகும். யுத்தத்தின் போது தந்திரோபாயத் திட்டங்களை வகுத்து அதனடிப்படையில் செயற்படவேண்டுமென்பதை மேற்சொன்ன நபிமொழி எமக்கு கற்றுத்தருகிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த நபிமொழியை நமது அரசியலுடன் கூட ஒப்பிட்டு நோக்க முடியும். இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது அரசியல் ரீதியான ஆக்கிரமிப்புப் போரையை தொடுக்கிறது. முஸ்லிம் நாடுகளின் மீதான மேற்கின் திட்டமிட்ட நவீன அரசியல் ஆக்கிரமிப்பை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும். அரசியல்  என்பது இன்று தந்திரோபாயங்களால் நிறைந்தது என்பதை சிலரால் இன்னும் உணர முடிவதில்லை. வெறுமனே உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக அரசியல் ரீதியான முடிவுகளை அல்லது கருத்துக்களை வெளியிடுவதைப் பார்க்கலாம். 


                            றாஷித் அல் கனூஷி

டியூனீஷியாவின் அந்நஹ்ழா கட்சியின் தலைவர் றாஷித் அல் கனூஷி அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்றின் போது அவர் குறிப்பிட்ட கருத்துக்களை சிலரால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது தாம் கிலாபத் சிந்தனைக்கு எதிரானாவர் என்று அந்த நேர்காணலிலே அவர் குறிப்பிட்டிருந்தார். மேற்கு ஊடகங்கள், மேற்கு அரசியல் வாதிகள் இஸ்லாமியவாதிகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் அவர்களின் ஒவ்வொரு செவ்விகளையும் நுணுக்கமாகவே அணுகுகின்றார்கள். அந்த நேர்காணலில் றாஷித் அல் கனூஷி தன்னை ஒரு இஸ்லாமியவாதி என்று காட்டிக்கொள்ளாமையினால் அவர் கூறிய சில கருத்துக்கள் இலங்கை முஸ்லிம் சகோதர்களிடையேயும் சில வாதங்களைத் தோற்றுவித்துள்ளது. அவர் உண்மையிலேயே ஒரு இஸ்லாமியவாதியா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இந்தக் குழப்பம் எங்களுக்கு மட்டுமல்ல, மேற்கத்தேயர்களுக்கும்தான். மேற்கத்தேயர்களும் நேர்காணலின் போது றாஷித் அல் கனூஷி தன்னை ஒரு இஸ்லாமியவாதியாக அடையாளப்படுத்துவாரென நினைத்து ஏமாந்து போய்விட்டனர். அவர் தன்னை ஒரு இஸ்லாமியவாதியாக அடையாளப்படுத்தியிருந்தால் இப்போது அவரையும், அவர் சார்ந்த கட்சியினரையும் இஸ்லாமியத் தீவிரவாதிகளாக மேற்கு ஊடகங்கள் அடையாளப்படுத்தியிருக்கும். அக்கட்சியினருக்கும், மதச்சார்பற்ற கட்சிகளோடு அவர்கள் அமைத்துள்ள கூட்டணிக்குமிடையே பிரிவினைகளைத் தோற்றுவித்து மீண்டும் அந்நாட்டில் அரசியல் ரீதியான கொந்தளிப்பை உருவாக்கி மேற்கு சார்பான ஒருவரை ஆட்சியில் அமர்த்தவே மேற்கு விரும்புகிறது. ஆனால் அவர் இராஜதந்திர ரீதியாக மேற்கத்தேயர்களை அணுகியுள்ளார் என்பதை சிலரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. மேற்கு ஊடகங்களுக்கு தங்களது அரசியல் நகர்வுகள் பற்றி தப்பபிப்பிராயம் வளர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை அவர் தடுத்துவிட்டார். இதனால் மேற்கத்தேயர்கள் இராஜதந்திர ரீதியில் தோல்வியடைந்து விட்டார்கள். இன்றைய நிலையில் இஸ்லாமியவாதிகள் தங்களது ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் இராஜதந்திர ரீதியில் திட்டமிட்ட அடிப்படையிலேயே மேற்கொள்கின்றனர்.

ஹாலிக் அல் - அர்ஷத்

Related Posts Plugin for WordPress, Blogger...