20 Feb 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லிணக்க முன்மாதிரி அரசியலில் ஈடுபடுவதன் அவசியம்


பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்து 64 வருடங்கள் கடந்த பின்பும் இன்னும் இனங்களுக்கிடையே இன முரண்பாடுகளும், விரிசல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளது. ஹெல உறுமய, ஜே. வீ. பீ மற்றும் ஜே. என். பீ போன்ற கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக சிறுபான்மை இனங்களிடையே நல்லபிப்பிராயம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாகவும் சிங்கள சமூகத்தினரிடையே தப்பபிப்பிராயம் நிலவுகிறது. இவ்வாறானதொரு நிலையில் இனங்களுக்கிடையே அரசியல் ரீதியிலான பரஸ்பர நல்லுறவை வளர்க்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.


இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதன் மூலம் மாத்திரமே இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை எதிர்பார்க்க முடியும். சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவின் அடிப்படையில் அமையாத, சர்வதேச சமூகத்தை மத்தியஸ்தமாகக் கொண்டு அதன் அழுத்தத்தின் மூலமாகத் தோற்றுவிக்கப்படும் எந்தத் தீர்வுப் பொதியும் நிரந்தரத் தீர்வாக அமையாது. கடும் போக்கு சிந்தனையுள்ளவர்கள் அரசியல் அதிகாரத்துக்கு வரும் போது அத்தகைய தீர்வுகள் காலாவதியாகிவிடும். இந்த யதார்த்தத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும்; தேசிய அரசியல் கட்சி என்ற அடிப்படையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அக்கட்சிக்கு முக்கிய பங்குண்டு. அக்கட்சியின் தீர்மானங்களில் ஏற்படும் தவறு இலங்கையின் அனைத்து சமூகங்களின் மீதும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினூடாக தமிழ் சமூகத்துக்கான தீர்வுத்திட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாமென்ற நம்பிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொண்டுள்ளனர். சர்வதேச சமூகத்தின் மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டிருந்ததாலேயே விடுதலைப்புலிகளின் தலைமையும் அழிவுக்குச் சென்றது என்பதை இந்த இடத்தில் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். விடுதலைப்புலிகளின் தலைமை விட்ட அதே வரலாற்றுத் தவறை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பின்பற்றுமாயின் இலங்கையின் இனப்பிரச்சினை முடிவில்லாத தொடராகவே சென்று கொண்டிருக்கும்.


அமெரிக்க வெளியுறவுச் செயலகத்தின் அழைப்பின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா சென்றதனூடாக தமிழர்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைத்ததெனவும் அதற்கு மாற்றமான கருத்துக்களையும் ஊடகங்களில் அவதானிக்க முடிகிறது. அமெரிக்க அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்காவுக்கு அழைத்துப் பேசியதன் நோக்கம் என்னவாக இருக்குமென கவனமாக ஆராயும் போது அது அமெரிக்க நலன் சார்ந்ததாகவே அமைகிறது என்பதும்; தமிழ் சமூகம் சார்ந்த நலன் அமெரிக்காவுக்கு சிறிதளவும் இல்லையென்பதும் தெளிவாகும்.

இந்தோனிஷியாவில் இருந்து கிழக்குத் திமோர் தனி நாடாகப் பிரிவதற்கும், சூடானிலிருந்து வட சூடான் என்று ஒரு தனி நாடு தோற்றம் பெறவும் அல்லது கொசோவோ  சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்த போது அதனை சுதந்திர அரசாக அங்கீகரிப்பதில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் காட்டப்பட்ட அக்கறை  ஏன் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காட்டப்படவில்லையென்ற யதார்த்தத்தை ஒவ்வொரு தமிழரும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளின் நலனை நிறைவு செய்வதில் தமிழர்கள் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சர்வதேச ரீதியில் தமிழர்கள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.


பிரித்தானியாவின் காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளின் அரசியல் நிலைமைகளை பகுப்பாய்வு செய்யும் போது நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒன்றில் அந்நாடுகளில் உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் அல்லது அயல் நாடுகளுடன் பிணக்குகளைக் கொண்டிருக்கும். சுதந்திரம் என்ற பெயரில் நம்முடைய நாடுகளை அவர்கள் விட்டுச் சென்றிருந்தாலும்; அவர்களுடைய திட்டமிட்ட சதி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நமது அயல் நாடான இந்தியா – பாகிஸ்தானுக்கிடையிலான பிரச்சினைகள், பலஸ்தீனப் பிரச்சினை என்பவற்றோடு நாமும் அவ்வட்டத்துக்குள்ளேயே இன்னும் அகப்பட்டிருக்கிறோம். 

சிறுபான்மையினத்தவர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்ய முடியாதென்ற மனோநிலை இன்று நாட்டின் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் நிலவுகிறது. சிறுபான்மையினத்தவர் ஒருவர் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வருவதற்கான சாத்தியக்கூறு இலங்கையில் இன்னும் காணப்படுகிறது என்பதே எனது வாதம். பிரித்தானியரின் ஆட்சிக்குப் பின்னரே அவ்வாறானதொரு மனோநிலை எங்களது மனங்களிலே விதைக்கப்பட்டுள்ளது.

கண்டி இராச்சியத்தின் மன்னனான சிறீ வீரபராக்கிரம நரேந்திரசிங்க எனும் சிங்கள மன்னனின் மரணத்துக்குப் பின்னர் தமிழர்களே சிங்கள இராசதானியான கண்டியின் மன்னர்களாக இருந்து வந்துள்ளனர். 1815 ம் ஆண்டு பிரித்தானியர் கண்டியை கைப்பற்றும் வரை இந்தியாவின் மதுரையைச் சேர்ந்த நாயக்கர் வம்சத்தவர்களே கண்டியின் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர். சிறீ விக்கிரம இராஜசிங்கன் எனும் தமிழரே கண்டிய இராசதானியின் இறுதி மன்னராக ஆட்சி செய்துள்ளார். இந்த வரலாற்று நிகழ்வுகளை வெறும் வரலாறாக மாத்திரம் வாசிப்புச் செய்து விட்டுச் செல்லாமல் இன்றைய அரசியல் சூழ்நிலைகளில் அவற்றை எவ்வாறு சாத்தியமாக்கலாமெனச் சிந்திக்க வேண்டும்.


1983ம் ஆண்டின் ஜூலைக் கலவரம், 1990ம் ஆண்டு புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, சிங்கள அப்பாவி மக்களுக்கு எதிரான புலிகளின் வன்முறைகள் போன்ற சம்பவங்களால் இன்றும் இலங்கை சமூகங்களிடையே மற்றொரு சமூகம் பற்றிய தப்பெண்ணம் தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இத்தகைய தப்பபிப்பிராயங்களை நீக்கி சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். இதற்கான சில முன்மொழிவுகளை இப்பத்தியில் முன்வைக்க விரும்புகிறேன். 

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதில் ஏனைய தமிழ் கட்சிகளை விட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக கடமைப்பாடுள்ளது. சமூகங்களிடையே நிலவும் தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கு சில தியாகங்களை, விட்டுக் கொடுப்புக்களைச் செய்வது அவசியம். இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்க வேண்டுமெனில் தமிழர் தரப்பு தமிழர்களுக்கு காட்டும் அக்கறையை 1990ம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் துரிதமாக அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியமர வேண்டுமென முஸ்லிம்களையும் தமிழர் தரப்பு தூண்ட வேண்டும்.


வட மாகாண சபைக்கான தேர்தல் அண்மையில் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுகிறது. எதிர்வரும் வடமாகாண சபைக்கான தேர்தலில் பிரதான வேட்பாளராக வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நேர்மையான முஸ்லிம் ஒருவரை தமிழர் தரப்பு இணைந்து பிரேரித்து அவரை முதலமைச்சராக தெரிவு செய்ய வேண்டும். வடமாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டுமென்ற இந்த ஆலோசனையை முன்வைக்கும் போது ஏன் முஸ்லிம் ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டுமென்ற வினா தமிழ் சமூகத்திற்கு மத்தியில் எழும் என்பது நிச்சயம். வட மாகாண சபைக்கு முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவதன் மூலம் அது இலங்கையின் வரலாற்றில் ஏற்படுத்தப் போகும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது அவசியம்.

தமிழர் தரப்பு வடமாகாண முதலமைச்சர் பதவியை முதல் தடவையிலேயே முஸ்லிம் சமூகத்துக்கு விட்டுக்கொடுக்க முன்வரும் போது அச்செயற்பாடு சிங்கள சமூகத்தினரிடையே தமிழர் தரப்பு பற்றிய நல்லெண்ணத்தை தோற்றுவிப்பதோடு முஸ்லிம் சமூகத்தினுள்ளும் தமிழர் தரப்பு பற்றிய நல்லெண்ணம் மேலும் அதிகரித்து இனங்களுக்கிடையிலான உறவுகள் வலுவடையும். ஒரு சமூகம் தனக்கு கீழுள்ள மற்றொரு சிறுபான்மை சமூகத்தை எவ்வாறு கெளரவப்படுத்த வேண்டுமென்பதை தமிழ் சமூகத்திடமிருந்து சிங்கள சமூகம் கற்றுக்கொள்வற்கான சந்தர்ப்பமாக இது அமையும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாத அரசியல் நடாத்தும் கட்சியென சிங்கள சமூகத்தினரிடையே வளர்க்கப்பட்டுள்ள தப்பபிப்பிராயம் இதன் மூலம் நீக்கப்பட்டு, நல்லிணக்க முன்மாதிரி அரசியலில் அக்கட்சி ஈடுபடுவது சாதாரண சிங்கள மக்களுக்கும் தெளிவாகும்.

சிங்கள சமூகத்தவர்களிடையே தமிழர் தரப்பு பற்றிய நல்லெண்ணம் தோற்றுவிக்கப்படுவதனூடாக தமிழர்களுடன் விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற வாதம் சிங்கள சமூகத்தினரிடையே வலுப்பெறும். இத்தகையதொரு சூழ்நிலையில் ஹெல உறுமய, ஜே. வீ. பீ, ஜே. என். பீ போன்ற கட்சிகளின் இனவாத அரசியல் சிங்கள மக்களிடையே செல்வாக்கற்றதாகிவிடும். அக்கட்சிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நல்லிணக்க முன்மாதிரி அரசியலைப் பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படும்.

முஸ்லிம் ஒருவர் வடமாகாண முதலமைச்சராக வரமுடியாதென்ற வாதம் தமிழ் சமூகத்துக்கு மத்தியில் வலுப்பெறுமாயின்; சிங்கள சமூகத்தவர்கள் தமிழர்களுடன் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ள முன்வருவதற்கான சூழலொன்றைத் தோற்றுவிப்பதற்கான சந்தர்ப்பமொன்றைத் தவறவிடுவதாகவே கொள்ளவேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினை முடிவில்லாமல் தொடர்வதற்கான சாத்தியத்தன்மையை இது வலுவடையச்செய்யும். இனவாத அரசியல் செய்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது மேலும் வரப்பிரசாதமாக அமையும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு, இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வொன்று எட்டப்பட்டு எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வரவேண்டுமாக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லிணக்க முன்மாதிரி அரசியலில் ஈடுபடுவது கட்டாயமாகும்.

ஹாலிக் அல் - அர்ஷத்